தொண்டைநாடும் சங்கநூல்களும்

தொண்டை நாடும் சங்க நூல்களும்.

வட பெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வட எல்லையாகவும் அரபிக் கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திர பெருநாடு கிமு 184 முதல் கிபி 250 வரை செழிப்புற்று இருந்தது

வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் தொண்டை மண்டலம் எனப்பட்டது. அது அருவாநாடு அருவா வடதலை நாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது. முன்னதில் காஞ்சி நகரம் உட்பட்டது.  பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும் இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்.

காளத்தி முதலிய மலையூர் களை தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் (தொண்டைமான் மாகணி) மாகாணம் எனப்படும். இரண்டு வெள்ளாறுகட்கு  இடையில் உள்ள நிலமே சோழநாடு.  தென் வெள்ளாற்றுக்குத்  தென்பால் உள்ள இடமே பாண்டியநாடு. கொச்சி திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேர நாடாகும்.  குடகு முதலிய மலைநாட்டு இடங்களும் அவற்றைச் சார்ந்த கடற்கரையும் கொங்கணம் எனப்படும். அதனை சங்ககாலத்தில் நன்னன் என்பவன் ஆண்டு வந்தான்.

வடக்கே இருந்த அருவா வடதலை நாட்டில் திருப்பதியை தன்னகத்தே கொண்ட மலை நாட்டுப் பகுதியை திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் பாவித்திரி என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள 'செட்டிபாளையம்'என்னும் ஊராகும்.

இந் நிலப்பகுதியை முன்னாளில் காகந்தி நாடு எனப் பெயர் பெற்றது என்பது புகாரின் மறுபெயர் ஆகும். சோழர் இப்பகுதியை கைக்கொண்ட பின் இதற்கு காகந்தி நாடு ( புகாருக்கு உரிமையான நாடு )என்று பெயரிட்டனர்.

கரிகாற்சோழன் காடு கெடுத்து நாடாக்கினான், விளைநிலங்கள் ஆக்கினான், ஏரி குளங்களை வெட்டுவித்தான், தொண்டை மண்டலத்தை நாடாக்கினான், நாகரீகத்தை தோற்றுவித்தான் என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன.

இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது.

திரையன் "அருவா வடதலை" நாட்டை ஆண்ட போது "இளந்திரையன்" அருவா நாட்டை ஆண்டனன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாக பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்.

தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் காளத்தி முதலிய மலை நாடுகளைச் சேர்ந்த காடுகளில் "களவர்"என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்களுக்கு தலைவனாக இருந்தவன் புல்லி என்பவன். இவன் திரையனுக்கு அடங்கியிருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பது அறியக்கூடவில்லை. இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் நாம் அறியக் கிடக்கும் உண்மையாகும்.

எல்லைப் போர்கள்.

வடபெண்ணை ஆற்றுக்கு வடக்கே ஆதோனிசாயை சுற்றி உள்ள நிலப்பரப்பு சாதவாகனர் (ஆந்திரர்) ஆட்சியின் தென்மேற்கு பகுதியாக இருந்தது. அந்த இடம் 'சாதவாகனி ராட்டிரம்'  என வழங்கப்பட்டது.  சாதவாகனரு டைய பெரும் படைத் தலைவனும் சூட்டு நாகர் மரபினனுமான  கந்த நாகன் என்பவன் இந்த பகுதிக்கு தலைவனாக இருந்தான்.

அதே காலத்தில் சாதவாகனரது தென்பகுதியை மேற் பார்த்துவந்த தலைவர்களே பல்லவர் ஆவர்.

ஆதலின் இந்தப்பகுதி தமிழகத்தின் அருவா வடதலை நாட்டிற்கும் வடக்கின் கண்ணது ஆதலின் எல்லைப் போர்கள் பல நடந்தவண்ணம் இருந்தன. இப் போர்களைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாவிட்டாலும் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் அரசருக்கும் 'ஆரியர்' என்று கருதப்பட்ட சாதவாகனர்க்கும்  எல்லைப்புற சண்டைகள் நடைபெற்றன என்பதை சங்கநூல்களில் நன்கு அறியலாம்.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பெயரும், திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் ஆரியரை வென்றான் என வருவதும், "சோழர் ஆரியரை வென்றனர் என்னும் குறிப்புகள் தமிழ் நூல்களில் பல இடங்களில் வருதலும், இவ்வெல்லைப்  போர்களையே குறித்தனவாதல் வேண்டும்.

கிபி இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சிலப்பதிகார காலத்தில் தோன்றி வளர்ந்து வந்த இந்த எல்லைப்புற போராட்டங்கள் ஆதோனி

யைச் சேர்ந்த நிலப்பகுதிக்கு தலைவராக இருந்த சாதவாகன அதிகாரிகளுக்கும் தென்பகுதி தலைவர்களுக்கும் நாளடைவில் வெற்றியை அளித்தனவாதல் வேண்டும். இன்றேல் அக்கால வழக்கிலிருந்த சாதவாகனர் கையாண்ட" கப்பல் நாணயங்கள்" வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை காணக் கிடத்தற்கு தக்க காரணம் வேண்டுமன்றோ?.

எழுதியவர்:
கோ.கண்ணன்.

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு