நாயக்கர் கால சிற்பங்களில் கோலாட்டமும் கும்மியும் :
சிற்பங்களில் கோலாட்டமும் கும்மியும் :
Source : Tamil Priyan/fb
கோலாட்டம் ஒரு விளையாட்டு முறை கல்வியாகும், இது உடற் பயிற்சியும் மனப் பயிற்சியும் கலந்த ஒரு அற்புதமான கலை. இதன் மூலம் ஆடுவோர் மனதில் மகிழ்ச்சியும் உடலுக்கு பயிற்சி யும் ஊட்ட வல்லது.
பண்டைய காலத்தில் மன்னர்களும் அரசவை கலைஞர்களும் இந்த கலைக்கு மிகுந்த ஆதரவு அளித்து வந்துள்ளனர். பல ஆலயங்களில் கோலாட்ட சிற்பம் சுவர்களிலும் தூண்களிலும் புடைப்பு சிற்பமாக இன்றும் காணலாம் .
வேலூர் கோட்டை கோயில் திருமண மண்டபத்திலும், வேலூர் அருகே உள்ள திருவலம், வில்வநாதேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ள ஒரே கல்லில் குடையப் பட்ட கல்தொட்டியில் வெளிப்புறம் முழுவதும் பெண்கள் கோலாட்டம் ஆடுவது போல புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட காட்சி கோலாட்டம் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துகிறது.
கோலாட்டமும் கும்மியும் மகிழ்ச்சியின் வெளிப்பாடா கவும், உள்நாட்டு அல்லது பொது விழாவாகவும் ஒவ்வொரு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
விஜயநகரம் மற்றும் நாயக்கர்களின் காலத்தில் இந்தக் கலை வடிவங்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விஷயம். இன்று இவை ஒரு மேடை நிகழ்ச்சியாகவோ அல்லது ஒரு நிகழ்வாகவோ மட்டுப்படுத்தப்பட்டிருந் தாலும், டாங்கி நடனம், குஜராத்தி திமாலி, வார்லிகளின் நடனம் போன்ற பழங்குடி சமூகங்கள், கொண்டாட்டத் தின் பகுதியாக உருவாக்கி,பண்டிகை மனநிலையை ஒரு பெரிய நிலைக்கு கொண்டு செல்கின்றன.
ஹொய்சாள/காகத்திய மற்றும் விஜயநகர/நாயக்கர் காலத்தின் போது கோலாட்டம் மற்றும் கும்மி போன்ற சித்திரிப்புக்களைக் காணலாம்.
பின்னல் கோலாட்டம்:
பின்னல் கோலாட்டம் என்பது குறுந்தடிச் சிலம்பு எனப்படும் கோலாட்டத்தில் ஒரு வகை ஆகும். கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது.
ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள். பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்த கலையாடல் நிகழும். அதாவது மூன்று மூன்று கயிறுகளாக இடைவெளி விட்டு விட்டத்தில் கட்டியிருப்பார்கள்.
ஒரு கயிறுக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் வீதம் பிடித்துக் கொண்டே பாட்டுக்கு ஏற்றபடி கோலாட்டம் அடித்தபடியே ஊடாட வேண்டும். பாட்டின் முடிவில் அழகான பின்னல் வந்திருக்கும் கயிறுகளில். இது சற்றுக் கடினமான வகை கோலாட்டமாகும். கல்யாண கோலாகலத்தின் மூண்றாம் நாள் (முகூர்த்தம் முடிந்த அடுத்த நாள்) பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து கிளம்பும் முன், எல்லா பெண்டிரும், இந்த பின்னல் கோலாட்டம் ஆட்டம் ஆடுவார்கள்.
அமைப்பு:
வட்டமான கட்டையில் ஓரத்தில் சுற்றி சுமார் 10 அல்லது 12 துளை போடப்பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு துளையிலும் நீண்ட மணியான் கயிறு எனப்படும் மெல்லிய உறுதியான கயிறு கோர்க்கப்பட்டு தோரணமாகத் தொங்கவிடப்பட்டு இருக்கும். அந்த கட்டையை கொக்கி மூலம் மரத்தின் கிளையில் கட்டிவிட்டு ஒவ்வொரு கயிறையும் ஆடுபவர்களிடம் கொடுப்பர். ஒரு கோலாட்ட கழியை அதில் சுற்றிக் கொள்ள வேண்டும். அதை இடது கையில் பிடிக்க வேண்டும். பின்பு இன்னொரு கழியை குறுக்கே 'T' போல வைத்துக்கொண்டு சுற்றி வட்டமாக நிற்க வேண்டும்.
ஆடலும் பாடலும்:
பாடுபவர் பாட ஆரம்பித்ததும் ஆடுபவர்கள் வலது கையில் உள்ள கழியை கயிறு சுற்றி இருக்கும் கழியில் தட்டி குறுக்கும் நெடுக்கும் தாளத்திற்கு தகுந்த வாறு ஆடிக்கொண்டு செல்லவேண்டும். ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு விதமான முறையில் நடன அசைவுகள் உண்டு. பாட்டு முடியும்போது அந்த கயிறுகள் பின்னிக் கொண்டு சடை போலவும் முருங்கைக்காய் போலவும் தெரியும். அதே போல் திரும்பவும் ஆடி முன்பு இருந்த நிலைக்கு வரவேண்டும். யாராவது தப்பாக ஆடிவிட்டால் ஆட்டம் முடியும் போது கயிற்றுப்பின்னல் சரியாக இருக்காது.
கோப் வேணி:
வட மாநிலங்களில் இக்கோலாட்டம் கோப் வேணி என அழைக்கப்படுகிறது. பல வண்ண துணிகளை யோ அல்லது கயிற்றையோ உத்தரத்தி லிருந்து தொங்கவிட்டு அதை நடனமணி களின் இடக் கைக்கோலில் கட்டி அவர்கள் அசைவுகளைச் செய்யும்பொழுது மெதுவாகக் கயிறுகள் ஓர் அழகிய பின்னலாக பின்னப்படும். பிறகு ஆடிய முறையின் நேர் எதிர் முறையில் ஆடிப் பின்னல் அவிழ்க்கப்படும். இதுவே ‘கோப் வேணி’. வேணி என்றால் பின்னல் என்று பொருள். இதற்குக் கிருஷ்ண லீலை பற்றிய பாடல்கள் இசைக்கப் படும். ஆடும் ஆண்களும் பெண்களும் வண்ண ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வார்கள்.
Comments
Post a Comment